IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

வீழ்ந்து விட்டேன் என்று நினைத்தீர்களோ…. டேர்னிங் பாயிண்ட் உடன் சூப்பர் டூப்பர் ஃபார்முக்கு திரும்பிய ஷேன் வாட்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற அரைகுறை மனதுடன் போட்டியை பார்த்தனர்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துபாய் மைதானத்தில் 170-க்கு மேல் அடித்தால் போதுமான ஸ்கோர் என்பதால் சென்னை பஞ்சாப் அணியை கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்தது.

தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளேயில் நேர்த்தியாக பந்து வீசினாலும் விக்கெட்டை வீழ்த்த இயலவில்லை. இதனால் பஞ்சாப் அணி 6.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, சரி இனிமேல் மயங்க் அகர்வால் கே.எல். ராகுல் ஆகியோர் இருக்கும்போது ரன்கள் குவித்து விடுவார்கள் என்று நினைத்து கவலையில் ஆழ்ந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

ஆனால் 8 ஓவர் முடிவில் 61 ரன்கள் என்ற நிலையில், 9-வது ஓவரை வீச வந்த பியூஸ் சாவ்லா ஒரு சூப்பர் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தார். முதல் பந்திலேயே மயங்க் அகர்வால் அவுட் ஆக்கினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு சற்று அடங்கியது என்றே சொல்லலாம்

அடுத்து வந்த மந்தீப் சிங் அதிரடியாக விளையாடினாலும், ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அவரை 27 ரன்னில் வெளியேற்றினார்.

3-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கேஎல் ராகுல் நிற்க அதிரடி பேட்ஸ்மேன் பூரன் களம் இங்கினார்.

பூரன் வாணவேடிக்கை நடத்திருக்கொண்டிருக்கும்போது, டெத் ஓவரின் முதல் ஓவரான 17-வது ஓவரை வீச வந்தார் ஷர்துல் தாகூர். முதல் பந்தில் பூரன் ஆட்டமிழக்க இரண்டாவது பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். 17 பந்தில் 33 ரன்கள் எடுத்த பூரனும், 63 ரன்கள் அடித்திருந்த கேஎல் ராகுலும் வெளியேற, ரசிகர்களுடன், சிஎஸ்கே வீரர்களும் சற்று நிம்மதி அடைந்தனர்.

அதன்பின் வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. டெத் ஓவராக கடைசி 4 ஓவரில் 37 ரன்களே விட்டுக்கொடுத்தது சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் வாட்சன் டு பிளஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்

முதல் ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்ட விரட்டினார். இரண்டு பந்துகளும் மிடில் பேட்டில் பட்டதை வாட்சன் எப்படி விளையாடுவார்? என்ற ரசிர்களுக்கு நம்பிக்கை வந்தது. இதே நம்பிக்கை வாட்சனுக்கும் இருந்தது.

முதல் 5 ஓவர் முடிவில் 41 ரன்களை எடுத்திருந்தது. 6-வது ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து பார்மில் இருக்கும் டு பிளிஸ்சிஸ் வாட்சனுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் பவர் பிளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்று 60 ரன்கள் குவித்தது. அதன்பின் இன்ஜின் சூடான பஸ் எப்படி சிட்டாக பறக்குமோ? அதேபோல் இருவரும் பஞ்சாப் அணியை பந்தாட தொடங்கினர்.
 
டு பிளிஸ்சிஸ் - ஷேன் வாட்சன்

8-வது ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி விரட்ட, டு பிளிஸ்சிஸ் ஒரு பவுண்டரி விரட்டினார். அடுத்த ஓவரில் வாட்சன் ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பத்து ஓவரில் 100 ரன் குவித்தது

11வது ஓவரை ஜோர்டான் வீசினார் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 31 பந்தில் அரைசதம் கடந்தார் வாட்சன். அதே ஓவரின் 5-வது பந்தில் சிங்கிள் அடித்து 33 பந்தில் அரைசதம் அடித்தார் டு பிளேசிஸ்.

அரை சதம் அடித்த பின் ஈவுஇரக்கமின்றி பஞ்சாப் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இதனால் 17.4 ஓவர்களில்  விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து சென்னை  அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்களும் டு பிளிஸ்சிஸ் 53 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்

வாட்சனை மாற்ற வேண்டும். எம்எஸ் டோனி இன்னும் வாட்சனை இன்னும் கட்டி இழுக்கிறார். சுனில் நரைனைப் போல் சாம் கர்ரனை தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு, இம்ரான் தாஹிரை சேர்க்க வேண்டியது தானே? என  ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையாக அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்துள்ளார்.

நெடுந்தூரம் செல்லும் பேருந்து இன்ஜின் சூடாகும் வரை மெதுவாகத்தான் செல்லும். அதன்பின் இன்ஜின் சூடாகி விட்டால் ஹைவேயில் சிட்டாய் பறக்கும். அதேபோல் வாட்சன் என்ற இன்ஜின் சூடாக 4 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது தற்போது இன்ஜின் சூடாகி ஹைவேயில் சென்றுகொண்டிருக்கிறது இப்படியே சென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடுத்து நிறுத்துவது கடினம்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker