CRICKETLATEST UPDATESNEWSTAMIL
வீராட் கோலியின் கேப்டன் பதவியில் பிரச்சினை இல்லை- காம்பீருக்கு ஹர்பஜன்சிங் பதிலடி
இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமீபத்தில் 5-வது முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டியில் தோற்றதால் வீராட் கோலியை காம்பீர் மீண்டும் விமர்சனம் செய்தார். அவர் அணியை வழிநடத்தும் விதம் சரியில்லை என்று பாய்ந்து இருந்தார்.
இந்த நிலையில் காம்பீருக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அந்த பொறுப்பு சுமையில்லை. கோலிக்கு சவால்கள் பிடிக்கும். அவர் ஒரு அணி தலைவர். முன்னாள் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.
தலைமை பொறுப்பு கோலியின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஏனென்றால் ஒருவரால் மட்டுமே நன்றாக விளையாடி ஆட்டத்தை வெல்ல முடியாது.
2-வது போட்டியில் ராகுல் நன்றாக ஆடினார். ஆனால் மற்ற வீரர்களும் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் கோலிக்கு இருக்கும் சுமை குறைந்து, அவரால் திறந்த மனதுடன் விளையாட முடியும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.