TAMIL
விஸ்டன் அறிவித்தசிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு இடம்
‘கிரிக்கெட் வீரர்களின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய கேப்டன் விராட் கோலி முதன்மையானவராக இடம் பிடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய வீராங்கனை எலிசி பெர்ரி ஆகியோரும் இந்த கவுரவ பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
31 வயதான விராட் கோலி குறித்து விஸ்டன் வெளியிட்ட பதிவில், ‘சவாலான நேரங்களில் விராட் கோலி மீண்டும், மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார்.
2014-ம் ஆண்டு நிறைவடைந்த இங்கிலாந்து தொடரில் இருந்து கொல்கத்தாவில் கடந்த மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் கோலியின் சராசரி 63.
இதில் 21 சதங்களும், 13 அரைசதங்களும் அடக்கம். மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரியை கொண்டுள்ள ஒரே தனித்துவமான பேட்ஸ்மேன்.
தெண்டுல்கர் ஓய்வு, டோனியின் பங்களிப்பு குறைந்த பிறகு உலக கிரிக்கெட் அரங்கில் கோலி அளவுக்கு அன்றாட அழுத்தத்தின் கீழ் யாரும் செயல்பட்டு இருக்க முடியாது’ என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
இதே போல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளது. 2010-ல் இருந்து 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த சர்வதேச போட்டியில் மற்றவர்களை காட்டிலும் கோலி 5,775 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளார்.
மற்றவர்களை விட 22 சதங்கள் அதிகமாக அடித்திருக்கிறார் என்று ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.