TAMIL
‘விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது’ – வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை

‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது என்று தங்களது பந்து வீச்சாளர்களுக்கு வெஸ்ட்இண்டீஸ் பயிற்சியாளர் சிமோன்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அளித்த ஒரு பேட்டியில் ‘இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது. அவரை வீழ்த்துவது மிகவும் கடினம் என்பதை அறிவோம். ஆனால் அவரை கண்டு எங்களது பந்து வீச்சாளர்கள் அதிகமாக பயப்படக்கூடாது. தைரியமாக பந்து வீச வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் சில 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினோம். அப்போது ரொம்ப மோசமாக ஆடிவிடவில்லை. ஒரு ஆட்டத்தை சமன் செய்தோம். இந்த அனுபவத்தை எங்களது வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டை விட இந்த முறை நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்தியாவை அதன் சொந்த இடத்தில் சாய்ப்பது எளிதல்ல’ என்றார்.
பொல்லார்ட் கருத்து
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் அளித்த பேட்டியில், ‘வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளப்போகிறோம். அதனால் எங்களை குறைவாகத் தான் மதிப்பிட்டு இருப்பார்கள். அதுவும் நல்லதுக்கு தான். ஆனால் களம் இறங்கி நமது திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்துவதில் தான் எல்லாமே இருக்கிறது. நமது திறமை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதை சரியாக செய்தால், எதை யும் (இந்தியாவை வீழ்த்துவது) சாத்தியமாக்க முடியும்.
போதிய காலஅவகாசம் இல்லாத நிலையிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் எங்களது வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இது நல்ல அறிகுறியாகும். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஓய்வறையில், இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். அவர்களை அனுபவம் வாய்ந்த வீரர் வழிநடத்துவது அவசியம். இந்த அடிப்படை பணியை நான் செய்கிறேன்’ என்றார்.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மான்டி தேசாய் நியமனம்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான மான்டி தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பு மான்டி தேசாய் வெஸ்ட்இண்டீஸ் அணியினருடன் இணைகிறார். 51 வயதான மான்டி தேசாய் ஆப்கானிஸ்தான், நேபாளம், கனடா மற்றும் ஐ.பி.எல். அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். கடைசியாக அவர் ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
இது குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சிமோன்ஸ் கூறுகையில் ‘ஏற்கனவே மான்டி தேசாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் திறமையான பயிற்சியாளர். வீரர்களின் திறமையை மேம்படுத்தும் திறமை படைத்தவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஆட்டம் குறித்து அதிக அறிவு படைத்த அவர் இந்த போட்டி தொடரிலேயே அணியினருடன் இணைவது நல்ல விஷயமாகும்’ என்றார். ‘வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவுக்கு பங்களிப்பேன்’ என்று மான்டி தேசாய் கருத்து தெரிவித்துள்ளார்.