CRICKETLATEST UPDATESNEWSTAMIL
விராட் கோலியின் ரன்அவுட் வருத்தம் அளிக்கிறது – வார்னே ஏமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டுவில் நேற்று தொடங்கிய பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 74 ரன் எடுத்திருந்த போது ரன்அவுட் ஆனார். கோலியின் ரன்அவுட்டுக்கு துணை கேப்டன் ரகானே தான் காரணம்.
நாதன் லயன் வீசிய 77-வது ஓவரில் கடைசி பந்தில் ரகானே பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கினார். இதனால் எதிர்முனையில் இருந்த கோலி ரன்அவுட் ஆனார். அவரது அவுட் துரதிர்ஷ்டவசமானது.
விராட் கோலி 16 ரன்னில் அவுட் ஆக வேண்டியவர். ஆஸ்திரேலிய அணி டி.ஆர்.எஸ்.க்கு செல்லாததால், அவர் தப்பினார். 74 ரன்னில் கோலி ரன் அவுட் ஆனது திருப்புமுனையாகும்.
கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
விராட் கோலி போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ரன்அவுட் ஆவதை பார்க்கும் போது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மனதை வருத்தம் அடைய செய்துள்ளது.
அவர் ஆடுகளத்திற்கு வரும்போது பெரிய இன்னிங்ஸ் வேண்டுமென எல்லோரும் சொல்லலாம். அதை உறுதியோடு அவரும் செய்து கொண்டிருந்தார். நம்மை போன்ற கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒவ்வொரு வரும் அவரது ரன் அவுட்டுக் காக வெட்கி தலைகுனிய வேண்டும்.
இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது:-
அந்த பந்தில் ரன் எடுத்திருக்கவே முடியாது. ஏனென்றால் பீல்டர் மிகவும் அருகில் இருந்தார். ஆனாலும் பார்ட்னர் ரகானேவின் அழைப்பை ஏற்று ரன் எடுக்க முன்வந்தார். கடைசியில் ரகானே வேண்டாம் என்று பின்வாங்கியதும் கோலி ரன்அவுட் ஆகி விட்டார்.
ரகானே மீது தவறு இருந்தாலும், அவரிடம் கோபித்து கொள்ளாமல் விராட் கோலி அமைதியாக பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த இன்னிங்சில் பல தடைகளை கடந்த கோலிக்கு இது கொஞ்சம் வலி இருக்கும். அது இயல்பானது.
இவ்வாறு சஞ்சஸ் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 2-வது முறையாக ரன்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்பு இதே அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2012)-ல் ரன்அவுட் ஆகியிருந்தார்.