TAMIL
விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி – கவாஸ்கர் புகழாரம்
நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கடினமான உழைப்பின் மூலம் கிரிக்கெட் உலகில் புகழின் உச்சத்தை எட்டிப்பிடித்ததுடன்,
வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையையும் தனதாக்கியவர் டோனி.
கோடி கணக்கில் பணம் சம்பாதித்தாலும் டோனி எப்பொழுதும் எளிமையாகவும், இயல்பாகவும் செயல்படும் குணம் கொண்டவர்.
மைதான ஊழியர்கள், ஓட்டல் பணியாளர்கள், ரசிகர்கள் என எல்லா தரப்பினரிடமும் பந்தா எதுவுமின்றி பழகக்கூடியவர்.
விமானத்துக்காக காத்து இருக்கையில் அவர் சில சமயங்களில் விமான நிலையத்தில் வெறுந்தரையில் படுத்து உறங்கியதை கூட பலரும் பார்த்து இருக்க முடியும்.
அமைதியின் இருப்பிடமாக விளங்கும் டோனி களத்தில் கோபமாக நடந்து கொள்வதை காண்பது அரிதான விஷயமாகும்.
அவர் கேப்டனாக இருந்தபோது கூட கேப்டனுக்கான தனிச்சலுகையை அனுபவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியது கிடையாது என்றும் விமான
பயணத்தின் போது சக வீரர்களுக்காக உயர் வகுப்பு (பிசினஸ் கிளாஸ்) இருக்கைகளை உதறிவிட்டு, சாதாரண வகுப்பில் (எகானமி கிளாஸ்)
பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்தார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அத்துடன் தங்களது நற்குணம் மற்றும் நல்ல கலாசாரத்தால் இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தை கட்டமைக்க முன்னாள் கேப்டன் டோனியும், இன்னாள் கேப்டன் விராட் கோலியும் உதவி இருக்கிறார்கள் என்றும் அவர் புகழ்ந்து இருக்கிறார்.
இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:
‘குறிப்பாக உள்ளூரில் நடைபெறும் சர்வதேச போட்டிகளின் போது, இந்திய கிரிக்கெட் அணி தங்களது வீரர்களை பாராட்டும் வகையில் அருமையான ஒரு நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்திய மண்ணில் நடக்கும்
போது இரு அணி வீரர்களும் ஒரு சிறப்பு விமானத்தின் மூலமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வார்கள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
அந்த விமானத்தில் போட்டியை ஒளிபரப்பக்கூடிய தொலைக்காட்சி குழுவினரும், அடுத்த போட்டிக்கு தேவையான கேபிள் வயர்களுடன் பயணிப்பார்கள்.
உயர் வகுப்பில் குறிப்பிட்ட அளவுக்கு தான் இருக்கைகள் இருக்கும். அந்த இருக்கைகளில் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், மானேஜர்கள் உள்ளிட்டோர் அமர்வார்கள்.
அத்துடன் முந்தைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சாதாரண வகுப்புக்கு பதிலாக உயர் வகுப்பில் அமர வாய்ப்பு அளிக்கப்படும்.
டோனி கேப்டனாக இருந்த போது, இந்த விமானங்களில் உயர் வகுப்பு இருக்கையில் அமர்வது அபூர்வமான ஒன்றாகும்.
தொலைக்காட்சி ஒளிபரப்பின் உண்மையான சாம்பியன்களான கேமராமேன், சவுண்ட் என்ஜினீயர்கள் ஆகியோருடன் அமர்ந்து தான் பயணம் செய்வார்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விராட் கோலி குறித்து கூறுகையில், ‘தற்போது முடிவடைந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்து
வீச்சாளர்களுக்கு விமான பயணத்தின் போது தனது உயர் வகுப்பு இருக்கையை விட்டுக்கொடுத்து விட்டு கேப்டன் விராட் கோலி சாதாரண வகுப்பு இருக்கையில் தான் பயணம் செய்வார்.
இதுபோன்றவை சாதாரண செயலாக தெரியலாம்.
ஆனால் அது அணியின் உத்வேகத்தை வளர்க்க பெரிதும் உதவும்‘ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
இதில் அவர் ரூ.35 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ.24 லட்சத்தை மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கும் வழங்கி இருப்பதாக அவரது மகன் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும் கொரோனா நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். அவர் வழங்கிய தொகை எவ்வளவு? என்பது வெளியிடப்படவில்லை.