CRICKETLATEST UPDATESNEWSTAMIL
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை அணி 4-வது முறையாக ‘சாம்பியன்’
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மகுடத்துக்காக உத்தரபிரதேசம்-மும்பை அணிகள் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மாதவ் கவுஷிக் 158 ரன்கள் (156 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 313 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட மும்பை பேட்ஸ்மேன்கள், உத்தரபிரதேச பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 73 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அட்டகாசமான தொடக்கம் தந்தார். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்து கோப்பையை வசப்படுத்தியது. ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை எட்டிய ஆதித்ய தாரே 118 ரன்களுடன் (107 பந்து, 18 பவுண்டரி) களத்தில் இருந்தார். மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2003-04, 2006-07, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது.
மும்பை பொறுப்பு கேப்டன் 21 வயதான பிரித்வி ஷா இந்த தொடரில் 8 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 827 ரன்கள் திரட்டியுள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். ‘இந்த தொடரில் எங்களது அணியில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். தனிப்பட்ட நபரின் சாதனையால் மட்டும் வெற்றி கிட்டவில்லை. அணியின் உதவியாளர்கள், வீரர்கள் அனைவருக்கும் இந்த கோப்பை உரித்தானது’ என்று பிரித்வி ஷா கூறினார்.