TAMIL
லோதா கமிட்டியின் பரிந்துரையை மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு – சுப்ரீம் கோர்ட்டின் அனுமதிக்காக காத்திருப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பி.சி.சி.ஐ. புதிய தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக ஜெய் ஷா, பொருளாளராக அருண்சிங் துமால் உள்ளிட்டோர் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். 38 உறுப்பினர்களும் (மாநில சங்கங் களை சேர்ந்தவர்கள்) கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை நீர்த்து போகச்செய்யும் விதமாக சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேல் யாரும் பொறுப்பில் நீடிக்கக்கூடாது, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திலேயோ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்திலோ தலா 3 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தால், அடுத்த 3 ஆண்டுகள் கட்டாயம் இடைவெளிவிட வேண்டும் என்பது உள்ளிட்டவை லோதா கமிட்டியின் சிபாரிசுகளில் முக்கியமானவை ஆகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
தற்போது இவற்றில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பி.சி.சி.ஐ. பதவி இரண்டையும் ஒன்று சேர்க்காமல் தனித்தனியாக கணக்கிட வேண்டும். இதன்படி ஒருவர் மாநில சங்கத்தில் பதவியில் இருந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கலாம். இந்த வகையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுகிறது. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளுக்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் அனுமதிக்காக அனுப்பப்பட உள்ளது.
லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி சவுரவ் கங்குலி ஜூலை மாதத்திற்கு பிறகு பதவியில் நீடிக்க முடியாது. ஏனெனில் அவர் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் இருந்து விட்டார். இதே சிக்கல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பதவி வகித்த ஜெய் ஷாவுக்கும் உள்ளது. இந்த விதிமுறையை மாற்றம் செய்வதன் மூலம் கங்குலி 2024-ம் ஆண்டு வரை பி.சி.சி.ஐ. சிம்மாசனத்தில் அமர முடியும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக செயலாளர் ஜெய் ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்பு இந்த கூட்டத்தில் பி.சி.சி.ஐ. தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி பங்கேற்று வந்தார்.
கூட்டத்திற்கு பிறகு கங்குலி நிருபர்களிடம் கூறுகையில், ‘பரிந்துரைகள் குறித்து கோர்ட்டு முடிவு செய்யும். மீண்டும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும். அதற்கு முன்பாக இரட்டை ஆதாய பிரச்சினைகள் குறித்து சில தெளிவு தேவைப்படுகிறது. இந்த கமிட்டியில் மீண்டும் இடம் பெற சச்சின் தெண்டுல்கரும், வி.வி.எஸ்.லட்சுமணும் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை’ என்றார்.
எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழு கமிட்டியின் பதவி காலம் முடிந்து விட்டதாகவும், அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ததாகவும் குறிப்பிட்ட கங்குலி உறுப்பினர்களின் பதவி காலம் நீட்டிக்கப்படாது என்றும் சூசகமாக கூறினார். தேர்வு குழு கமிட்டிக்கு வரும் புதிய நிர்வாகிகளின் பதவி காலம் 5 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கும் என்று தெரிகிறது. கோர்ட்டின் உத்தரவை பொறுத்து கிரிக்கெட் வாரியம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும்.