TAMIL
ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டி தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பயிற்சிகளையும் அணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், தனது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை அணி இன்னும் பயிற்சியை துவங்கவில்லை. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது நினைவிருக்கலாம். ஹர்பஜன் சிங் சென்னை அணியுடன் துபாய் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்த நிலையில், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.