CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் – டோனி பாராட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்ரான 87 ரன் குவித்தார். பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்தில் 72 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார்.
கடைசி ஓவரில் அணிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இதில் 5-வது பந்தை ஜடேஜா சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டநிலையில் அந்த பந்தையும் சிக்சர் அடித்தார்.ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணிக்கு இது 5-வது வெற்றி (13 ஆட்டம்) ஆகும்.
கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கிய கொல்கத்தா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.
வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் எங்களது திட்டங்கள் சாதகமாக சென்றது என்று நினைக்கிறேன். டாசில் ஜெயித்தது மகிழ்ச்சி அளித்தது. இந்த சீசனில் ஜடேஜா அற்புதமாக விளையாடினார். எங்களது அணியில் அவர் மட்டும் தான் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை எடுத்தார். விளையாடாத வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம்.அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
ருதுராஜ் கெய்க் வாட்டை வலை பயிற்சியின் போது பார்த்தோம். ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் மீண்டு வர 20 நாட்கள் ஆனது. ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர். அவர் நிறைய பேசும் நபர் அல்ல. எனவே சில நேரங்களில் நிர்வாகத்துக்கு ஒரு வீரரை அளவிடுவது கடினம்.
அவரை முதல் ஆட்டத்தில் விளையாட வைத்தபோது விரைவில் அவுட் ஆனார். நெருக்கடியால் அவர் வெளியேறினாரா? அல்லது அவரது இயல்பான விளையாட்டா? என்பதை சொல்வது கடினம். ஒரு வீரரை பற்றி கணிக்க ஒரு பந்து மட்டும் போதாது.
நாங்கள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வில்லை என்றாலும் இந்த தொடரில் எங்களது சிறப்பை வெளிப்படுத்துவது முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.