CRICKETLATEST UPDATESNEWSTAMIL

ராவல்பிண்டி டெஸ்ட் – இறுதி நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 243 ரன்கள் தேவை

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்னில் அவுட்டானார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
 
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
தென்ஆப்பிரிக்காவில் பவுமா 44 ரன்னும், முல்டர் 33 ரன்னும், மாக்ரம் 32 ரன்னும், டி காக் 29 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல் அவுட்டானது.
 
பாகிஸ்தான் சார்பில்  ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீசி அசத்தினார்.
 
71 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அசார் அலி 33 ரன்னும், பஹிம் அஷ்ரப் 29 ரன்னும் எடுத்தனர். பொறுப்புடன் ஆடிய மொகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ரன்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருந்தார்.
 
இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் அரை சதமடித்தார்.
 
நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 59 ரன்னுடனும், வான் டெர் டுசன் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 
கடைசி நாளான இன்று கைவசம் 9 விக்கெட் உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 243 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker