TAMIL

ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் – கோலி, கம்பீர் கருத்து

* காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு படையினர் 5 பேர் பலியானார்கள்.

பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்

விராட்கோலி, முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும் கடமையை மறக்காதவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது.

ஹந்த்வாரா சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நான் தலை வணங்குகிறேன்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கவுதம் கம்பீர், ‘உண்மையான ஹீரோ யார்? நடிகரோ, விளையாட்டு வீரரோ, அரசியல்வாதியோ கிடையாது.

எப்பொழுதும் ஒரு உண்மையான ஹீரோ ராணுவ வீரர் தான். அவர்களின் பெற்றோர்களுக்கு சல்யூட்.

இந்த பூமியில் உலவும் துணிச்சலான ஆன்மாக்கள்’ என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மிகச்சிறந்த வீரர்.

தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அவர் தான்’ என்று தெரிவித்தார்.

தற்போது, குறுகிய வடிவிலான (20 ஓவர் மற்றும் ஒருநாள்) போட்டியில் உலகின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, ‘நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்’ என்று பதிலளித்தார்.

* 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகப்படுத்த 10 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்சாக (மொத்தமான 40 ஓவரை)

பிரித்து விளையாடலாம் என்று கூறப்படும் யோசனைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெலிவிஷன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசுகையில், ‘20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சை இரண்டாக உடைக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

ஒருநாள் போட்டியில் (50 ஓவர்) ஒரு இன்னிங்சை இரண்டாக பிரிக்கலாம் என்று தெண்டுல்கர் சொன்ன ஆலோசனையில் அர்த்தம் இருந்தது’ என்று தெரிவித்தார்.

* கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் நடைபெற்று வந்த புகழ்பெற்ற லா லிகா லீக் கால்பந்து போட்டி கடந்த மார்ச் 12-ந் தேதி முதல் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்பெயினின் ‘டாப்-2’ டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் கால்பந்து அணிகள் இந்த வாரத்தில் தங்களது தனிப்பட்ட பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளன.

அதற்கு முன்னதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதார துறை சார்பில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

முதலில் வீரர்கள் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அணியாக கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் மாதத்தில் லா லிகா போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker