TAMIL
ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்
* முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 33 வயதான ரபெல் நடால் (ஸ்பெயின்) தனது நீண்டகால காதலி 31 வயதான மெரி பெரலோவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது 14 ஆண்டு கால பழக்கம் திருமண பந்தத்தில் முடிந்துள்ளது. மஜோர்கா தீவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தினர் உள்பட 350 பேர் கலந்து கொண்டனர்.
* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று ‘ஏ’ பிரிவில் துபாயில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர்- பெர்முடா அணிகள் மோதின. இதில் பெர்முடா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சிங்கப்பூர் அணி 41 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நவின் பராம் அரைசதம் (72 ரன், 41 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அணியை கரைசேர்த்தார். சிங்கப்பூர் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
* இந்திய மல்யுத்த ஜாம்பவான்களில் ஒருவரான தாடு சோகுலே மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. நியூசிலாந்தில் 1974-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சோகுலே விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதை பெற்றவர் ஆவார்.
* மாஸ்கோவில் நேற்று நடந்த கிரம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் வருகிற 27-ந்தேதி சீனாவில் தொடங்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 8-வது வீராங்கனையாக பெலின்டா பென்சிச் தகுதி பெற்றார்.