TAMIL
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி நிதான ஆட்டம்: வசவதா சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா-பெங்கால் அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 80.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து இருந்தது.
அர்பித் வசவதா 29 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாளில் காய்ச்சல் காரணமாக 5 ரன்னில் இருக்கையில் வெளியேறிய புஜாரா, அர்பித் வசவதாவுடன் இணைந்து களம் இறங்கினார்.
இருவரும் விக்கெட்டை இழக்காமல் அணியின் ஸ்கோரை வலுப்படுத்தும் நோக்கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் ரன் ஆமை வேகத்தில் நகர்ந்தது.
நிலைத்து நின்று ஆடிய அர்பித் வசவதா 255 பந்துகளில் சதத்தை எட்டினார்.
அணியின் ஸ்கோர் 348 ரன்னாக உயர்ந்த போது அர்பித் வசவதா (106 ரன்கள், 287 பந்து, 11 பவுண்டரி) ஷபாஸ் அகமது பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு வசவதா-புஜாரா இணை 380 பந்துகளில் 142 ரன்கள் திரட்டியது.
தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய இந்த ஜோடி 5 மணி நேரம் களத்தில் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில ஓவர்களில் புஜாரா (66 ரன்கள், 237 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) முகேஷ்குமார் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதையடுத்து களம் கண்ட மன்கட் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வீழ்ந்தார்.
2-வது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 160 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் சேர்த்துள்ளது.
நேற்று அந்த அணி 79.1 ஓவர்கள் விளையாடி 178 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது.
சிராக் ஜனி 13 ரன்னுடனும், தர்மேந்திரசிங் ஜடேஜா 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
பந்து தாக்கியதில் நடுவர் காயம்
இந்த ஆட்டத்தின் முதல் நாளில் பெங்கால் அணியின் பீல்டர் வீசிய பந்து ஆடுகள நடுவர் ஷம்சுதீனின் அடிவயிற்று பகுதியில் தாக்கியது.
இதற்காக ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை பெற்ற அவர் வலி காரணமாக நேற்று நடுவர் பணியை கவனிக்க களம் இறங்கவில்லை.
இதனால் மதிய உணவு இடைவேளை வரை இரு முனைகளிலும் நடுவர் பணியை அனந்த பத்மநாபன் மட்டுமே கவனித்தார்.
பொதுவான நடுவர் தான் ஆடுகள நடுவராக பணியாற்ற வேண்டும் என்று விதிமுறை இருப்பதால் உடனடியாக மாற்று நடுவரை பணிக்கு நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உள்ளூர் நடுவரான பியூஷ் காக்கர் லெக் பகுதியில் நடுவர் பணியை பார்த்தார்.
மதிய இடைவேளைக்கு பிறகு ஷம்சுதீன் தற்காலிகமாக டி.வி.நடுவர் பணியை கவனித்தார்.
3-வது நடுவர் ரவி ஆடுகள நடுவராக அனந்த பத்மநாபனுடன் இணைந்து செயல்பட்டார்.
ஆடுகள நடுவர் பணிக்கு மும்பையை சேர்ந்த யஷ்வந்த் பார்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் அவசரமாக அழைத்து இருக்கிறது.
அவர் இன்று நடுவர் பணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.