TAMIL

ரஞ்சி கிரிக்கெட்: மராட்டிய அணி 44 ரன்னில் சுருண்டது

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதில் டெல்லியில் நேற்று தொடங்கிய 4-வது லீக் ஆட்டம் ஒன்றில் சர்வீசஸ்-மராட்டியம் அணிகள் சந்தித்தன.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த மராட்டிய அணி, சர்வீசஸ் வீரர்களின் மிரட்டலான வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க
முடியாமல் முதல் இன்னிங்சில் 30.2 ஓவர்களில் 44 ரன்னில் சுருண்டது.

சர்வீசஸ் அணி தரப்பில் பூனம் பூனியா 5 விக்கெட்டும், சசித்ஆனந்த் பாண்டே 3 விக்கெட்டும், தினேஷ் பதானியா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சர்வீசஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

மொகாலியில் தொடங்கியுள்ள பஞ்சாப்-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க
ஆட்டக்காரர் சுப்மான் கில் 10 ரன்னில் இருக்கையில் சுபோத் பாதியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்திடம் கேட்ச்
கொடுத்தார்.



உடனடியாக நடுவர் முகமது ரபி, சுப்மான் கில் ‘அவுட்’ என்று அறிவித்தார்.

ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்று சுப்மான் கில் நடுவர் முகமது ரபியுடன் வாக்குவாதம் செய்ததுடன் வெளியேற மறுத்தார்.

பின்னர் நடுவர் முகமது நபி, மற்றொரு நடுவர் பாசிம் பதாக்குடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை மாற்றி சுப்மான் கில் அவுட்
இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி அணி வீரர்கள் விளையாட மறுத்து பவுண்டரி அருகே ஒன்றுகூடி நின்றனர்.

இதைத்தொடர்ந்து போட்டி நடுவர் ரங்கநாதன் தலையிட்டு டெல்லி வீரர்களை சமரசம் செய்தார்.

எனவே சுமார் 10 நிமிடம் தடைக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

நடுவர் அவுட் கொடுத்தும் வெளியேற மறுத்த சுப்மான் கில் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.



இந்த சர்ச்சைக்கு மத்தியில் தொடர்ந்து ஆடிய சுப்மான் கில் 23 ரன்னில் சிமர்ஜீத் சிங் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்திடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.

மும்பையில் நடந்து வரும் கர்நாடக அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய முன்னாள் சாம்பியனான மும்பை அணி முதல்
இன்னிங்சில் 55.5 ஓவர்களில் 194 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது.

முன்னதாக மும்பை இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார்.



இதனால் களத்தை விட்டு வெளியேறி சிகிச்சை பெற்ற அவர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணியில் ஆடுவாரா? என்ற
சந்தேகம் எழுந்துள்ளது.

கான்பூரில் நேற்று தொடங்க இருந்த தமிழ்நாடு-உத்தரபிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ‘டாஸ்’ கூட
போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker