TAMIL
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதில் கான்பூரில் நடைபெறும் தமிழ்நாடு-உத்தரபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
2-வது நாளான நேற்று ‘டாஸ்’ ஜெயித்த உத்தரபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ, சூர்யகுமார் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
அணியின் ஸ்கோர் 79 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சிறப்பாக ஆடிய கங்கா ஸ்ரீதர் ராஜூ 45 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
நல்ல தொடக்கத்தை பின்னால் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
கவுசிக் காந்தி 7 ரன்னிலும், பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விஜய் சங்கர் 24 ரன்னிலும், ஜெகதீசன் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தடுமாறியது.
கே.முகுந்த் ஒரு ரன்னுடனும், சாய் கிஷோர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். உத்தரபிரதேச அணி தரப்பில் சவுரப் குமார் 3 விக்கெட்டும், அங்கித் ராஜ்பூத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
டெல்லியில் நடந்து வரும் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மராட்டிய அணி முதல் இன்னிங்சில் 44 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சர்வீசஸ் முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து இருந்தது.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சர்வீசஸ் அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மராட்டிய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் தவித்து வருகிறது.