TAMIL
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தல்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் மும்பை – உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி, விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவின் இரட்டை சதத்தின் (203 ரன்) உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 353 ரன்கள் எடுத்திருந்தது.
சர்ப்ராஸ் கான் 132 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று சர்ப்ராஸ் கான் தனி வீரராக அணியை முன்னெடுத்து சென்றார்.
பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை.
நிலைத்து நின்று அமர்க்களப்படுத்திய சர்ப்ராஸ் கான் பந்தை சிக்சருக்கு விளாசி முச்சதத்தை நிறைவு செய்தார்.
ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் ஒருவர் முச்சதம் அடிப்பது இது 7-வது முறையாகும்.
அவருக்கு கேப்டன் ஆதித்ய தாரே (97 ரன்), ஷம்ஸ் முலானி (65 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர்.
மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 688 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அத்துடன் இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
10 மணி 33 நிமிடங்கள் பேட்டிங் செய்த 22 வயதான சர்ப்ராஸ் கான் 301 ரன்களுடன் (391 பந்து, 30 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பைக்கு 3 புள்ளியும், உத்தரபிரதேச அணிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன.