TAMIL
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி அபார வெற்றி
டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் ரெயில்வே-கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 182 ரன்கள் எடுத்தது.
பதிவு: ஜனவரி 31, 2020 03:30 AM
புதுடெல்லி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் ரெயில்வே-கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 182 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 211 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. 29 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி, கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 30 ஓவர்களில் 79 ரன்னில் அடங்கியது. கர்நாடக அணி தரப்பில் ரோனித் மோர் 6 விக்கெட்டும், அபிமன்யு மிதுன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய கர்நாடக அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
தர்மசாலாவில் நடந்த மும்பை-இமாச்சலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது, 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் கடைசி நாளான நேற்றைய ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் விதர்பாவை வீழ்த்தியது.