TAMIL

ரஞ்சி கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன் – அம்பத்தி ராயுடு அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, பின்னர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி ஐதராபாத் அணிக்காக விளையாட தயார் என்று அந்த கிரிக்கெட் சங்கத்துக்கு தகவல் அனுப்பினார். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



இந்த வருடம் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். நான் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. அணியில் அதிக அளவில் அரசியல் உள்ளது. நல்ல கிரிக்கெட்டை விளையாடக்கூடிய சூழ்நிலை அணியில் இல்லை. இந்த நிலைமை எனக்கு அசாதாரணமானதாக இருக்கிறது. எனவே வரும் ரஞ்சி சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன். புதிய தலைவர் அசாருதீனிடம் இந்த பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தேன். தன்னாலான முயற்சிகளை எடுப்பதாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தல் வாக்குறுதியால் அணியின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிளப் நிர்வாகிகளின் சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி படைத்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். யாராவது ஒருவர் இதைப்பற்றி பேச வேண்டும் என்பதால் நான் பேசுகிறேன். ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட அர்ஜூன் யாதவ் அதற்கு தகுதியானவர் கிடையாது. செல்வாக்கின் காரணமாக அவர் இந்த பதவியை பெற்றுள்ளார். இவ்வாறு அம்பத்தி ராயுடு கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker