CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ரகானேவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது – ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நடைபெற்றது. 4-வது நாள் ஆட்டத்தில் 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டபின், அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய நான்கு பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், முதல் இன்னிங்சில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரவிசாஸ்திரி கூறுகையில், முதல் இன்னிங்சில் ரகானே இறங்கிய போது 2 விக்கெட்டை இழந்திருந்தோம். அதன்பிறகு 6 மணிநேரம் பேட்டிங்கில் போராடினார். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் பேட்டிங்குக்கு கடினமான அந்த நாளில் 6 மணி நேரம் கவனம் செலுத்துவது நம்ப முடியாத ஒன்று. அவரது இன்னிங்ஸ் தான் (112 ரன்) இந்த டெஸ்டில் திருப்பு முனையாகும். விராட் கோலி, ரகானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக் கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரகானே பொறுமையாக செயல்படுவார்.
முதல் டெஸ்டில் மோசமாக தோற்று அதன் பிறகு வலுவாக மீண்டெழுந்து வெற்றி பெற்ற வகையில், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.