TAMIL
மைதானத்தில் பொழிந்த சிக்ஸர் மழை: இமாலய இலக்கு நிர்ணயித்த இந்திய அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது இருபது ஓவர் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.
அணியின் துவக்க வீரர்கள் மட்டும் இணைந்து 135 ரன்களை எடுத்திருந்தனர். ரோகித்சர்மா 34 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தபோது, அவுட்டாகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேற, பின்னர் களமிறங்கிய விராட்கோஹ்லி, லோகேஷ் ராகுலுடன் இணைந்து அதிரடி காட்டினார்.
சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், 56 பந்துகளில் 91 ரன் எடுத்திருந்த போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 240 ரன்களை குவிந்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 29 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.