TAMIL
மேத்யூஸ்… சண்டிமல்.. டிக்வெல்ல உட்பட இலங்கை வீரர்களை சரமாரியாக விளாசிய தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல்
இலங்கையின் மேத்யூஸ், சண்டிமல், டிக்வெல்ல உட்பட வீரர்களை, அணி மேலாளரும் தலைமை தேர்வாளருமான அசாந்தா டி மெல் கண்டித்துள்ளார்.
இந்த வாரம் கராச்சியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 263 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை, இரண்டு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.
இதுகுறித்து பேட்டியளித்த இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாளரும் தலைமை தேர்வாளருமான அசாந்தா டி மெல், கராச்சி டெஸ்டில் மோசமாக விளையாடி டிக்வெல்லா, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமல் ஆகியோரை கண்டித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் இரு வீரர்களுக்கும் குறைபாடுகள் இருக்கிறது.
191 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் சுருட்டிய பின், இலங்கை முதல் இன்னிங்ஸில் 270 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருக்ககூடாது, 450 ஓட்டங்களுக்கு கூடுதலாக குவித்திருக்க வேண்டும்.
ஒன்றரை நாட்கள் எளிதாக துடுப்பாடியிருக்க முடியும். ஆடுகளத்தில் நான் எந்த தவறும் பார்க்கவில்லை. 476 இலக்கை இலங்கையால் அடித்து வெற்றிப்பெற முடியும் என்று நான் நினைத்தேன்.
டிக்வெல்லா அவுட்டான விதத்தை பாருங்கள். இதுவரை 35 டெஸ்ட் போட்களில் விளையாடி உள்ள அவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை என நான் அவரிடம் சொன்னேன்.
அவர் 65 ஓட்டங்கள் எடுத்த பிறகு ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுகிறார். குறைந்தபட்சம் பொறுமையாக இறுதி வரை விளையாடி இருக்க வேண்டும்.
அன்று அவர் இரட்டை சதம் அடித்திருந்தால், நாம் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
மேத்யூஸ் தனது கடைசி சதத்தை எப்போது அடித்தார்? டிசம்பர் 2018ல் நியூசிலாந்தில் அடித்தார்.
2018 ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் சண்டிமல் தனது கடைசி சதத்தை அடித்தார்.
சண்டிமல் முதல் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பாடினார், ஆனால் இதுபோன்ற போட்டியில் 74 ஓட்டங்கள் எடுத்தது போதுமானதில்லை, இலங்கையிடம் உலகத்தை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை.
தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார். ஆனால், அவர் அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை கேட்சைக் கொடுத்தார், அடுத்த பந்து மோசமான ஷாட் விளையாடி வெளியேறுகிறார்.
இது எல்லாம் தவறு. அவர்கள் ஒரு இன்னிங்ஸை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பொறுமை பெறுவதை அறிந்து கொள்ள வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்கள் திறமை மட்டுமல்ல, உங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதும் நிறைய அம்சங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் எவ்வாறு துடுப்பாடினர் என்று பாருங்கள்.
இலங்கையின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர், தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் இணைந்து இலங்கையின் முக்கிய துடுப்பாட்டகார்களிடையே உள்ள சிக்கல்களை சரிசெய்ய பணியாற்றுவார் என அசாந்தா டி மெல் கூறினார்.