
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தது. தொடரை வெல்வதற்கான கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் பேரிஸ்டோவ் அதிகபட்சமாக 113 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்வரிசை வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி, 73 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பின்னர் கைகோர்த்த மேக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கேரி அடுத்தடுத்து சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ரஷித் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் அதிரடியால், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.