IPL TAMILTAMIL

மெக்கல்லம் பயிற்சியில் கொல்கத்தாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்?

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க முழுவீச்சில் தயாராகி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டில் கவுதம் கம்பீர் தலைமையில் கோப்பையை வென்றது.

அதன் பிறகு ஒவ்வொரு சீசனிலும் வலுவான அணியாக களம் கண்ட போதிலும் இறுதிசுற்றை கூட எட்டவில்லை.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மீண்டும் ஒரு முறை கேப்டன்ஷிப்பை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

புதிய வரவாக ரூ.15½ கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஏலத்தில் வாங்கப்பட்டு உள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பவுலர் என்பதால் அது கொல்கத்தாவுக்கு அனுகூலமே. இதே போல் அதிரடி நாயகன் இயான் மோர்கனின் பேட்டிங்கும் வலுசேர்க்கும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் ஆகியோரைத் தான் மலைபோல் நம்பியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

சூறாவளி பேட்டிங்கால் அசாத்திய இலக்கையும் அலாக்காக கைக்குள் கொண்டு வந்து விடும் ஆற்றல்படைத்த ஆந்த்ரே ரஸ்செல், ஒரு சில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றி விடுவதை பல தருணங்களில் பார்த்து வியந்தவர்கள் ஏராளம். கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் மொத்தம் 249 பந்துகளில் 52 சிக்சருடன் 510 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 204.81) குவித்ததுடன், 11 விக்கெட்டுகளும் எடுத்து அமர்க்களப்படுத்தினார்.

இதே போல் தொடக்க வீரராக இறங்கும் சுனில் நரின் சுழலிலும் வித்தை காட்டக்கூடியவர். இவர்களது ஆட்டம் ‘கிளிக்’ ஆகாத சமயங்களில் கொல்கத்தாவுக்கு நிச்சயம் நெருக்கடி தான்.

பெரும்பாலான ஆட்டங்களில் வாய்ப்பு பெறும் நிலையில் உள்ள பேட்ஸ்மேன்கள் சுப்மான் கில், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, நாகர்கோட்டி என்று இளம் வேகப்பந்து வீச்சாளர் பட்டாளம் அணிவகுத்தாலும் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது சற்று பலவீனமாகும்.

புதிய தலைமை பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் பணியாற்றுவது அந்த அணிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு மெக்கல்லம் பயிற்சியாளராக செயல்பட்டார்.

அவரது வியூகங்களுக்கு கைமேல் பலனாக, டிரின்பாகா அணி தோல்வியையே சந்திக்காமல் பட்டத்தை உச்சி முகர்ந்தது.

அந்த வகையில் மெக்கல்லத்தின் சாதுர்யமான திட்டமிடலால் கொல்கத்தாவுக்கும் ஜாக்பாட் அடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வருகிற 23-ந்தேதி அபுதாபியில் சந்திக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker