CRICKETLATEST UPDATESNEWSTAMIL
முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் : தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் முடிந்து கால்இறுதிசுற்று நேற்று தொடங்கியது. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கர்நாடகா, பஞ்சாப்புடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடகா பஞ்சாப்பின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண்நாயர் (12 ரன்), தேவ்தத் படிக்கல் (11 ரன்) உள்பட யாரும் ஜொலிக்கவில்லை. அதிகபட்சமாக அனிருத்தா ஜோஷி 27 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரமன்தீப்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. சிம்ரன் சிங் 49 ரன்களும், கேப்டன் மன்தீப் சிங் 35 ரன்களும் விளாசி அவுட் ஆகாமல் இருந்தனர். கர்நாடகா பரிதாபமாக ெவளியேறியது.
இரவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இமாச்சலபிரதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழ்நாடு கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இமாச்சலபிரதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. கேப்டன் ரிஷி தவான் 35 ரன்களும், அபிமன்யு ராணா 28 ரன்களும் எடுத்தனர். தமிழக வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், முகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி ஒரு கட்டத்தில் ஜெகதீசன் (7 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (2 ரன்) உள்பட 5 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை 66 ரன்னுக்குள் இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் பாபா அபராஜித்தும், ஷாரூக்கானும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ஷாரூக்கான் அதிரடியாக ஆடி நெருக்கடியை குறைத்தார். இறுதியில் அபராஜித் பந்தை சிக்சருக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்தார். தமிழக அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. பாபா அபராஜித் 52 ரன்களுடனும் (45 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாரூக்கான் 40 ரன்களுடனும் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இதே மைதானத்தில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பரோடா (பகல் 12 மணி), ராஜஸ்தான்-பீகார் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.