CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?
11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிட்டும். உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ஆட்டங்களில் களம் கண்டு ஒரு அரைசதம் கூடஅடிக்கவில்லை.
அவர் வாணவேடிக்கை காட்டியிருந்தால் சில ஆட்டங்களில் ராஜஸ்தான் வாகை சூடியிருக்கும். ஜாஃப்ரா ஆர்சர் (15 விக்கெட்) தவிர மற்றவர்களின் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. தரமான பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள ராஜஸ்தான் அணி திறமைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து ஆடினால் சாதிக்கலாம்.
நடப்பு சாம்பியனான மும்பை அணி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை நெருங்கி விட்டது. பேட்டிங், பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்கும் மும்பை அணி, கடந்த ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை ஊதித்தள்ளியது.
டிரென்ட் பவுல்ட், பும்ராவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. இந்த புயல்வேக பந்து வீச்சாளர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 33 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்கள். தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா களம் திரும்புவார் என்று தெரிகிறது.
ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார். பாண்ட்யா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பும்ரா, பொல்லார்ட், பவுல்ட் என்று பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய மும்பை அணியின் ஆதிக்கம் இந்த ஆட்டத்திலும் தொடர அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது நினைவு கூரத்தக்கது.