TAMIL
மும்பையில் 4000 ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளித்த சச்சின் தெண்டுல்கர்!
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவ தொடங்கி உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதன் காரணமாகத் தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு உதவி செய்தும் அவர்களின் தேவை பூர்த்தியடையவில்லை.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் நன்கொடையாக வழங்கினார்.
மேலும் அப்னாலயா என்ற அறக்கட்டளை மூலம் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்துக்கான நிதி செலவை ஏற்றார்.
இந்நிலையில் மீண்டும் மும்பை மாநகரில் கொரோனா வைரஸ் காரணமாகத் தொழிலின்றி வருமானம் இல்லாமல் தவித்த 4000 ஏழைக் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னார்வ அமைப்பு மூலம் சச்சின் தெண்டுல்கர் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் கொடுத்த நிதியின் விவரம் குறித்து அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இது குறித்துத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு கூறியுள்ள குறிப்பில், உங்களின் நிதியுதவி 4000 ஏழை மக்களுக்கு உதவும், அது மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் சேரும்.
இது எங்களுக்கு மிகவும் உறுதுணையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நன்றிகள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.