TAMIL
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகம் மூடல்!

கொரோனா பரவுவதற்கு மத்தியில் மும்பையில் உள்ள அதன் தலைமையகம் மூடப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளி நிறுவனங்கள், வணிக வளாகங்களை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ தனது ஊழியர்களை செவ்வாய்க்கிழமை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் ‘வீட்டிலிருந்து வேலை செய்ய’ கோரியுள்ளனர்.
முன்னதாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020ன் தொடக்க திகதியை ஏப்ரல் 15க்கு ஒத்திவைத்தது பிசிசிஐ.
எட்டு ஐபிஎல் அணி வீரர்களும் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். 13வது ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.