CRICKETLATEST UPDATESNEWSTAMIL

முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த சேலம் வீரர் நடராஜன் குறித்த தகவல்

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேக்கப்பந்து வீச்சாளர் நடராஜன் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது, சேலம் அருகே தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். நடராஜனும் அவ்வாறு விளையாடியவர்தான். கல்லூரியில் படிக்கும்போது அவர் வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட கிரிக்கெட் விளையாட்டுக்காக மைதானத்தில் இருந்த நேரம் அதிகம்.

இவரின் தந்தை தங்கராஜ் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை பார்த்தவர். தாயார் சாந்தா கூலி தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன். கிரிக்கெட்டில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற வேட்கை நடராஜனுக்கு இருந்தது.

சிறிய வயதில் இருந்தே வறுமையின் பிடியில் சிக்கி, பல போராட்டங்களை சந்தித்த இவர், பென்சில், பேனா போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டுள்ளார். 5 வயதில் டென்னிஸ் பந்தின் மூலம் கிரக்கெட் விளையாட தொடங்கிய நடராஜன், தனது 20-வது வயதில் தான், கிரிக்கெட் பந்தை முதன்முறையாக பார்க்கிறார்.

கடினமாக பயிற்சி செய்து, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அவரை ஜெயப்பிரகாஷ் என்பவர்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிட்டார். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் டிவிஷ்னல் மேட்சுக்கு தேர்வானார். பின்னர் சென்னை கிரிக்கெட் அணியின் கீழ்நிலைப் பிரிவில் சேர்ந்தார்.

இந்த சமயங்களில் அவர் காயத்தால் பலமுறை அவதிப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு திறமையை நிரூபிக்க துவங்கினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்து 2019ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார்.

இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறியதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யார்க்கர் கிங்’ என்னும் பட்டத்தைச் சொந்தமாக்கி, ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.

நவ்தீப் சைனி முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், ஒருநாள் தொடரிலும் மாற்று வீரராக நடராஜன் பெயர் இடம்பெற்றது. இதற்கான அறிவிப்பை, முதல் ஒருநாள் போட்டி தொடங்கும்முன் பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும். நவ்தீப் சைனி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார், இரண்டாவது போட்டியில் 7 ஓவர்களுக்கு 70 ரன்கள் வாரி வழங்கியதால் நடராஜன் அணியில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

3-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மார்னஸ் லபுஷேன், ஆஸ்டன் ஆகர் ஆகியோரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரது விளையாட்டை அவரது சொந்த ஊர் மக்கள் டிவியில் பார்த்து ரசித்தனர். எப்போதும் கிரிக்கெட்டே பார்க்காத அவரது ஊர் மக்கள் தனது சொந்த ஊர் பையன் விளையாடுகிறான் என்று டிவியில் கிரிக்கெட்டை பார்த்தனர். முதல் போட்டியிலேயே 2 விக்கெட் எடுத்ததால் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

அவரது தாய் சாந்தா, தங்கை தமிழரசி, உறவினர்கள் அனைவரும் நடராஜனின் பந்து வீச்சையும், கிரிக்கெட்டையும் டிவியில் பார்த்து ரசித்தனர். சர்வதேச போட்டியில் விளையாடும் மகனை டிவியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக தாய் சாந்தா தெரிவித்தார். அவரது தங்கை தமிழரசி மற்றும் உறவினர்கள் நடராஜன் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை படைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

நடராஜனின் சாதனைப் பயணம் மேலும் தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாளை முதல் தொடங்க உள்ள டி-20 தொடரிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker