TAMIL

முதல் ஒரு நாள் போட்டியில் நேரஅனுமதி கடந்து ஓவர் வீசிய இந்திய அணிக்கு 80% அபராதம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.



இதில் முதல் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும், லோகேஷ் ராகுல் 88 ரன்களும் மற்றும் கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி விளையாடியது. அதன் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் (32) மற்றும் நிக்கோல்ஸ் (78) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதேபோன்று லாத்தம் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் குறைந்த ரன்களே எடுத்தனர்.

சான்ட்னெர் 1 பவுண்டரி, ஒரு சிக்சர் என அடித்து 12 ரன்கள் எடுத்தும், ராஸ் டெய்லர் 109 (84 பந்துகள்) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெய்லர் அடித்த சதம் அந்த அணி வெற்றி பெற வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.



நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக 4 ஓவர்களை வீசியது கண்டறியப்பட்டது.

இதனால் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 80% அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டியின் 4வது ஆட்டத்தில், நேரஅனுமதி கடந்து 2 ஓவர்கள் பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 40% அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டியில் நேரஅனுமதி கடந்து ஓவர் வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் இந்திய அணி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக 4 ஓவர்களை வீசியதற்காக போட்டி கட்டணத்தில் 80% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.



கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர் வீசி வந்த நிலையில், இந்திய அணி மீது தொடர்ந்து 3 போட்டிகளில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker