TAMIL
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 165 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.
விக்கெட் கீப்பர் வாட்லிங் (14 ரன்), காலின் டி கிரான்ட்ஹோம் (4 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பும்ரா வீசிய முதல் பந்திலேயே வாட்லிங் (14 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த டிம் சவுதி 6 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் கடைசி 3 விக்கெட்டுக்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்று இந்திய பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
குறிப்பாக உயரமான வீரரான கைல் ஜாமிசன், இந்திய பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார்.
முகமது ஷமியின் ஓவர்களில் 2 சிக்சர், அஸ்வினின் ஒரே ஓவரில் 2 பிரமாதமான சிக்சர் என்று அதிரடி வேட்டை நடத்தி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அவர் 44 ரன்களில் (45 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆனார்.
சிறிது நேரத்தில் கிரான்ட்ஹோமும் (43 ரன், 74 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து 10-வது விக்கெட்டுக்கு வந்த டிரென்ட் பவுல்ட்டும் சகட்டுமேனிக்கு மட்டையை சுழட்டி மிரள வைத்தார். இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட விஞ்சியது.
பவுல்ட் தனது பங்குக்கு 24 பந்துகளில் 38 ரன்கள் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.
முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அவர் இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 11-வது முறையாகும்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் அடியெடுத்து வைத்தனர்.
பிரித்வி ஷா (14 ரன்) இந்த முறையும் சோபிக்கவில்லை. 2-வது விக்கெட்டுக்கு புஜாரா இறங்கி முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்.
நிறைய பந்துகளை தொடவே இல்லை.
மறுமுனையில் மயங்க் அகர்வால் ஓரளவு வேகம் காட்டினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 78 ரன்களுடன் நல்ல நிலையில் தென்பட்டது.
தேனீர் இடைவேளைக்கு முந்தைய பந்தில் புஜாரா (11 ரன், 81 பந்து) அவுட் ஆக, சிக்கல் உருவானது.
டிரென்ட் பவுல்ட் வீசிய அந்த பந்தை தொட வேண்டாம் என்று நினைத்து புஜாரா பேட்டை மேலாக உயர்த்தினார்.
ஆனால் பிட்ச் ஆனதும் சற்று திரும்பிய அந்த பந்து ஆப்-ஸ்டம்பை பதம் பார்த்தது.
கணிப்பு பொய்த்து போன வேதனையுடன் புஜாரா நடையை கட்டினார்.
அடுத்து கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வாலுடன் இணைந்தார். ஆடுகளம் முதல் நாள் போன்று பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.
ஆனாலும் நியூசிலாந்து பவுலர்கள் ‘ஷாட்பிட்ச்’ யுக்தியை கையாண்டு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடைவிடாது நெருக்கடி கொடுத்தனர்.
இதில் டிரென்ட் பவுல்ட்டின் பவுலிங் ரொம்ப துல்லியமாக காணப்பட்டதால், அவரது பந்து வீச்சை சமாளிக்க இந்தியர்கள் பெரும்பாடு பட்டனர்.
அணியின் ஸ்கோர் 96-ஆக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (58 ரன், 99 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிம் சவுதி லெக்சைடில் வீசிய பந்தை தட்டிவிட முயன்ற போது, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நுழைந்தார்.
இந்த நியூசிலாந்து பயணத்தில் ஜொலிக்காத விராட் கோலிக்கு இந்த இன்னிங்சும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. பவுல்ட், ஷாட்பிட்சாக வீசிய பந்து எகிறி வந்தது.
அதை ‘புல்ஷாட்’டாக கோலி அடிக்க முனைந்த போது, பந்து பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச்சாக சிக்கியது.
கோலி 19 ரன்களில் (43 பந்து, 3 பவுண்டரி) ‘சரண்’ அடைந்தார்.
இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் பரிதவித்தது.
இந்த சூழலில் ரஹானேவுடன், ஹனுமா விஹாரி கைகோர்த்தார். ‘ரன் வராவிட்டாலும் பரவாயில்லை; விக்கெட்டை இழந்துவிடக்கூடாது’ என்ற நோக்குடன் இருவரும் விளையாடினர்.
அளவுக்கு அதிகமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்கோர் ஒரேயடியாக மந்தமானது.
ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 5 ஓவர்களை மெய்டனாக்கினர். அதே நேரத்தில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.
ரஹானே 25 ரன்களுடனும் (67 பந்து, 4 பவுண்டரி), விஹாரி 15 ரன்களுடனும் (70 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தினை துவங்கிய இந்திய அணியில் ரஹானே 29 ரன்களும், விஹாரி 15 ரன்களும், ஆர். அஸ்வின் 4 ரன்களும், இஷாந்த் சர்மா 12 ரன்களும், ரிஷாப் பண்ட் 25 ரன்களும், பும்ரா (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் முகமது சமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 81 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், கிராண்ட் ஹோம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அவர்கள் மொத்தம் 26 ஓவர்களை மெய்டனாக வீசியது குறிப்பிடத்தக்கது.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களான டாம் லாதம் 7 ரன்னும், டாம் பிளண்டெல் 2 ரன்னும் எடுத்து அணியை எளிதில் வெற்றிபெறச் செய்தனர்.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.