TAMIL

முதலாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல் வெற்றி – ஹெட்மயர், ஹோப் சதம் விளாசினர்

சென்னையில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மயர், ஹோப் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.



இதன் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.

இந்திய அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

வேகம் குறைந்த மந்தமான இந்த ஆடுகளத்தில் இருவரும் நிதானத்தை கடைபிடித்தனர். 11-வது பந்தில் தான் ரோகித் சர்மா தனது முதலாவது ரன்னை எடுத்தார்.



வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் தொடச்சியாக 2 மெய்டன் ஓவர்களை வீசி மிரட்டினார்.

காட்ரெல் தனது இன்னொரு ஓவரில் இந்தியாவுக்கு இரட்டை செக் வைத்தார்.

அவர் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை லோகேஷ் ராகுல் (6 ரன்) லெக்சைடில் தட்டிவிட்ட போது அது எழும்பி கேட்ச்சாக மாறியது.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி பவுண்டரி அடித்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் அந்த உற்சாகம் அடுத்த நிமிடத்திலேயே கரைந்து போனது.

அதே ஓவரில் கோலி (4 ரன்) காட்ரெல் பந்தில் போல்டு ஆனார்.

பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.



விக்கெட் விழுந்ததும் காட்ரெல் தனக்கே உரிய பாணியில் சல்யூட் அடித்து அவரை வழியனுப்பினார்.

மறுமுனையில் பொறுமையாக ஆடிய ரோகித் சர்மா 36 ரன்களில் (56 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர்.

சில ஓவர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய பிறகு ஏதுவான பந்துகளை விரட்டியடித்தனர். ரோஸ்டன் சேசின் சுழலில் இருவரும் தலா ஒரு சிக்சர் பறக்க விட்டனர்.

இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை தொடும் போலவே தோன்றியது.



ஸ்கோர் 194 ரன்களை எட்டிய போது (36.4 ஓவர்) ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களில் (88 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

ரிஷாப் பண்ட் தனது பங்குக்கு 71 ரன்கள் (69 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய நிலையில் எல்லைக்கோடு அருகே பிடிபட்டார்.

இதன் பிறகு ரன்வேகம் சற்று தணிந்தது.

இருப்பினும் கேதர் ஜாதவ் (40 ரன், 35 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்து அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதன் பின்னர் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் கூட்டணி போட்டு இந்திய பந்து வீச்சை சிதைத்தனர்.



குறிப்பாக ஹெட்மயர் இந்திய பவுலர்கள் குல்தீப், ஜடேஜா, ஷமியின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை தூள் கிளப்பினார்.

கோலியின் வியூகங்களை எல்லாம் தகர்த்தெறிந்த ஹெட்மயர் தனது 5-வது சதத்தை நிறைவு செய்தார்.

அவர் 106 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் அய்யர் வீணடித்தார்.

தங்களது வெற்றிக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 218 ரன்கள் திரட்டிய நிலையில் பிரிந்தது.

ஹெட்மயர் 139 ரன்களில் (106 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து நிகோலஸ் பூரன் வந்தார். மறுமுனையில் ஷாய் ஹோப் தனது 8-வது சதத்தை எட்டினார்.

தொடர்ந்து, ஷிவம் துபேயின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி விளாசிய பூரன் இலக்கையும் எட்ட வைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



இந்த மைதானத்தில் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும்.

ஷாய் ஹோப் 102 ரன்களுடனும் (151 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), பூரன் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஹெட்மயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2-வது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

ஜடேஜா ரன்-அவுட்: கோலி அதிருப்தி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 48-வது ஓவரில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (21 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.



ஜடேஜா ஒரு ரன்னுக்கு வேகமாக ஓடிய போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டர் ரோஸ்டன் சேஸ் பந்தை ஸ்டம்பின் மீது சரியாக எறிந்தார்.

முதலில் நடுவர் ஷான் ஜார்ஜ் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அப்பீல் செய்யவில்லை.

ஆனால் மைதானத்தில் உள்ள மெகா திரையில் ரீப்ளேயை பார்த்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இது அவுட் என்று கூறி நடுவரிடம் முறையிட்டார்.

இதையடுத்து 3-வது நடுவரின் கவனத்துக்கு சென்றது. டி.வி. ரீப்ளேயில் ஜடேஜா ரன்-அவுட் தான் என்பது தெரிய வந்ததால், அவுட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.



இருப்பினும் இவ்வளவு தாமதமாக டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தது இந்திய கேப்டன் கோலியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

வெளியில் இருந்த அவர் உடனடியாக தனது இருக்கையை விட்டு எழுந்து ஆட்சேபனையை தெரிவித்தார்.

எது எப்படியோ அவர் மைதானத்திற்குள் வரவில்லை.



ஆட்டம் முடிந்ததும் ரன்-அவுட் சர்ச்சை குறித்து பேசிய கோலி, ‘பீல்டர் கேட்கும் போது, நடுவர் நாட்-அவுட் என்கிறார்.

அத்துடன் அது முடிந்து விட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு டி.வி. ரீப்ளேயில் பார்த்து விட்டு அப்பீல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிரிக்கெட்டில் இது போன்று நிகழ்ந்ததை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker