TAMIL
‘முகத்தில் குத்துவேன் என்று ஹைடன் மிரட்டினார்’ – நினைவு கூறும் பார்த்தீவ் பட்டேல்
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட விக்கெட் கீப்பர் 35 வயதான பார்த்தீவ் பட்டேல், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனுடன் நடந்த ஒரு மோதல் சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்துள்ளார். அது குறித்து பார்த்தீவ் பட்டேல் கூறியதாவது:-
‘2004-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் விக்கெட்டை இர்பான் பதான் சாய்த்தார்.
ஹைடன் ஏற்கனவே சதம் (109 ரன்) அடித்திருந்தாலும் இலக்கை நோக்கி துரத்தும் போது முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்து விட்டார். அப்போது நான் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றேன்.
ஹைடன் பெவிலியன் நோக்கி திரும்பும் போது அவரை நோக்கி, ‘ஹூ..ஹூ…’ என்று கிண்டல் செய்தேன். இதனால் என் மீது மிகுந்த கோபம் அடைந்தார். பிரிஸ்பேன் ஓய்வறையில் அவர் நின்று கொண்டிருந்தார்.
நான் அங்கு சென்ற போது, ‘இது போல் மீண்டும் நடந்து கொண்டால் முகத்தில் ஓங்கி குத்தி விடுவேன்’ என்று எச்சரித்தார்.
நான் அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். பிறகு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடிய போது இருவரும் நண்பர்களாகி விட்டோம்.
ஐ.பி.எல். முடிந்து வளரும் அணிக்கான போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது ஹைடன் என்னை தனது வீட்டுக்கு வரவழைத்து சிக்கன் பிரியாணியுடன் விருந்தளித்தார்’.
இவ்வாறு பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.