TAMIL
மிரட்டிய மேத்யூஸ்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி… தொடரை முழுவதுமாக கைப்பற்றி சாதனை
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது.
தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் கருணரத்னேவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தனர்.
ஃபெர்னாண்டோ 29 ரன்களில் அவுட்டாக, கருணரத்னே 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மூன்றாம் வரிசையில் இறங்கிய குசால் பெரேராவும் சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 44 ரன்களில் அவுட்டாகி, அரைசதத்தை தவறவிட்டார்.
ஆஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களில் அவுட்டாக, குசால் மெண்டிஸ் மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.
மெண்டிஸ் 55 ரன்களும் டி சில்வா 52 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, வழக்கம்போலவே திசாரா பெரேரா அதிரடியாக ஆடி தன் பங்கிற்கு 38 ரன்களை விரைவாக குவித்து கொடுத்தார்.
இடையடுத்து 50 ஓவர்களில் 307 ரன்களை எட்டியது இலங்கை அணி.
308 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ஆம்பிரிஸ் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 111 ரன்களை குவித்தனர்.
சுனில் ஆம்ப்ரிஸ் 60 ரன்களிலும் ஹோப் 72 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நிகோலஸ் பூரானும் கேப்டன் பொல்லார்டும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர்.
இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அரைசதம் அடித்த பூரானை 50 ரன்களிலேயே வீழ்த்தினார் ஏஞ்சலோ மேத்யூஸ். அதன்பின்னர் பொல்லார்டையும் 49 ரன்களில் வீழ்த்தினார்.
டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவருமே தலா 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ஹைடன் வால்ஷ், ரோஸ்டான் சேஸ் ஆகியோரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஃபேபியன் ஆலன் மறுமுனையில் அடித்து ஆடி இலக்கை துரத்தினார்கள்.
கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 23 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 49வது ஓவரில் ஹைடன் வால்ஷும் ரோஸ்டான் சேஸும் ரன் அவுட்டாகினர்.
ஆலன் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார்.
மேலும் 4 சிங்கள் அடிக்கப்பட்டது.
எனவே 49வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஆலன், இரண்டாவது பந்தில்
ஆட்டமிழக்க, எஞ்சிய 4 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்ததால், 301 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.