TAMIL
மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியும் – இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் தணிந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
அதேநேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி இருப்பதால் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படும் பட்சத்தில், ஐ.பி.எல். போட்டியை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
ஆனால் மத்திய அரசின் அனுமதி, மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒத்துழைப்பு, வருங்கால போட்டி அட்டவணை ஆகியவற்றை பொறுத்து தான் ஐ.பி.எல். போட்டியின் தலைவிதி நிர்ணயமாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து நாட்டு வீரர்களையும் ஒருங்கிணைக்கும் போட்டிகளில் ஐ.பி.எல். மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
கடந்த இந்திய பொதுத்தேர்தலில் ஓட்டுபோட்ட மக்களை விட அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை பார்த்து இருக்கிறார்கள்.
ஸ்பான்சர் விஷயத்தில் கிரிக்கெட் தான் முன்னிலையில் இருக்கிறது.
உலகின் சிறந்த வீரர்கள் வந்து விளையாடுவது தான் ஐ.பி.எல். போட்டியின் தனி சிறப்பாகும். அந்த தனிசிறப்பு தொடர வேண்டும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. எனவே இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் எடுக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும்.
அரசின் வழிமுறைகளை நாங்கள் அப்படியே கடைப்பிடிப்போம்.
தற்போதைய ஊரடங்கு காலகட்டம் முடிந்ததும், மழைக்காலம் (பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை) தொடங்கி விடும். மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கு முன்னதாக தற்போதைய நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். அதற்கு தகுந்தபடி எங்களது அணுகுமுறை அமையும்.
ஐ.பி.எல். போட்டியை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும். போட்டிக்கு முன்னதாக எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும். வழக்கமாகவே போட்டி அட்டவணை நெருக்கடியாக இருக்கும். புதிய நடைமுறைகள் போட்டி அட்டவணையில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். பயிற்சிக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. இருப்பினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.