ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை துவம்சம் செய்து 3-வது வெற்றியை ருசித்தது.
இதில் ஐதராபாத் நிர்ணயித்த 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது.
தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது, பவர் பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) விக்கெட்டை இழந்தால் அது மிகவும் கடினமாக இருக்கும்.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (9 ரன்) ரன்-அவுட் ஆனது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி நாங்கள் தூக்கியடித்த பெரும்பாலான பந்துகள் பீல்டர்கள் கையில் சிக்கியது.
கடைசி 5 ஆட்டங்களில் எங்களது இறுதி கட்ட பந்து வீச்சில் திணறினோம்.
ஆனால் இந்த ஆட்டத்தில் அதில் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம். அவர்களின் தொடக்கத்தை பார்த்த போது, 230 ரன்களை தாண்டுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.
எங்கள் பவுலர்கள் தைரியமாக செயல்பட்டு கட்டுப்படுத்தினார்கள்.
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது புரியும். சில நேரங்களில் நாம் பொறுமை காத்து தான் ஆக வேண்டும்’ என்றார்.