TAMIL

‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ – ராபின் உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருப்பவருமான கர்நாடகாவை சேர்ந்த 34 வயதான ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இணையதள உரையாடலின் போது கூறியதாவது:-

2009 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான் தினசரி மனஅழுத்த பிரச்சினையை எதிர்கொண்டேன். அத்துடன் தற்கொலை எண்ணமும் தொடர்ச்சியாக தோன்றியது.

அந்த மாதிரியான நேரங்களில் நான் கிரிக்கெட் பற்றி கூட சிந்திப்பது கிடையாது. அப்போது எனது மனதில் கிரிக்கெட் தொலைதூரத்துக்கு போய் விடும்.

இன்றைய நாளை எப்படி சமாளித்து அடுத்த நாளுக்கு எப்படி செல்லப் போகிறேன் என்பதையும், என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதையும் யோசித்து கொண்டே இருப்பேன்.

ஆனால் கிரிக்கெட் இது போன்ற எண்ணங்களை எனது மனதில் இருந்து விலக்கி வைத்தது.

கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் மனரீதியிலான குடைச்சல்களை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

சில நாட்களில் எனக்கு நானே சிந்தித்து கொண்டு இருக்கும் போது, மூன்று வரை எண்ணி முடித்தவுடன் ஓடி சென்று பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தியது. அந்த சமயத்தில் என்னை நானே ஒரு மனிதனாக புரிந்து கொண்டு செயல்படுவதற்கான முயற்சியை தொடங்கினேன்.

அடுத்து வாழ்க்கையில் எனக்கு தேவையான மாற்றங்களை கொண்டுவர வெளிநபர்களின் உதவியை நாடினேன். ஏதோ ஒரு காரணத்தால் எனது மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரமுடியவில்லை.

அதனால் வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி மேற்கொண்டாலும், போட்டிகளில் ஜொலிக்க இயலவில்லை.

எனக்குள் இருக்கும் பிரச்சினையை என்னால் முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சில சமயங்களில் நமக்குள் இருக்கும் தவறை நாம் ஒத்துக்கொள்ளமாட்டோம்.

ஆனால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டியது உண்மையிலேயே முக்கியமானதாகும். தவறை ஏற்க மறுக்கும் உணர்வு எல்லோருக்கும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக தங்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஒத்துக்கொள்ள கஷ்டப்படும் ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம் இருக்கும்.

சில சமயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்று நான் நினைக்கிறேன்.

அது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை சந்தித்து நாம் மேலும் வளர உதவிகரமானதாக இருக்கும்.

எனது எதிர்மறையான எண்ணங்கள் குறித்து நான் வருத்தப்பட்டது கிடையாது.

ஏனெனில் அவை என்னை நேர்மறையாக மேம்பட உதவி இருக்கிறது என்று அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker