TAMIL
மனஅழுத்தத்தால் தற்காலிக ஓய்வு: மேக்ஸ்வெல்லின் முடிவை வரவேற்கிறேன் – கோலி பேட்டி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விடைபெற்றுள்ளார். இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது அணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு வீரரும் தங்களது மனநிலை குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். அந்த வகையில் மேக்ஸ்வெல் தான் மனநெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக வெளிப்படையாக கூறி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க எடுத்த முடிவு உண்மையிலேயே அற்புதமானது. அதை வரவேற்கிறேன். இதே போன்ற ஒரு காலக்கட்டத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது (10 இன்னிங்சில் 134 ரன் மட்டுமே எடுத்தார்) உலகமே முடிந்து போய் விட்டது போன்று உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது, யாரிடம் என்ன சொல்வது? எப்படி பேசுவது என்று தெரியாமல் பரிதவித்தேன். வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தயங்கினேன். நான் சரியான மனநிலையில் இல்லை, அதனால் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன் என்று கூறவில்லை அவ்வளவு தான். மற்றபடி மனஅழுத்தம் எனக்குள் ஆட்டிப்படைத்தது.
இத்தகைய விஷயத்தில் மேக்ஸ்வெல் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். நல்ல மனநிலையில் இல்லாத போது எவ்வளவு தூரம் தான் தொடர்ந்து முயன்று பார்ப்பது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போட்டியில் இருந்து விலகி இருப்பது அவசியமாகிறது. கிரிக்கெட்டை முழுமையாக கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தெளிவு வேண்டும். வீரருக்கு இடைவெளி தேவைப்படும் போது அதை தைரியமாக சொல்ல வேண்டும். அவரது முடிவை எதிர்மறையாக பார்க்காமல் மதிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கோலி கூறினார்.
இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் (நவ.22-26) பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இது குறித்து கோலிடம் கேட்ட போது, ‘முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. முதல்முறையாக நேற்று தான் (நேற்று முன்தினம்) இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க்) பயிற்சியின் போது விளையாடினேன். சிவப்பு நிற பந்துடன் ஒப்பிடும் போது இது அதிகமாக ஸ்விங் ஆகிறது. ஆடுகளமும் பவுலர்களுக்கு ஒத்துழைத்தால், இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் முழுமையாக இருக்கும். ஆனால் பிங்க் பந்து பழசான பிறகு அதன் தன்மை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை’ என்றார்.