TAMIL

மகளை பார்க்க முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது – வங்காளதேச முன்னாள் கேப்டன் ஷகிப் உருக்கம்

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசன் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த ஒரு ஆண்டு தடையை அனுபவித்து வருகிறார்.

அவருடைய மனைவி உம்மி அகமது சிஷிர், மகள் அலைனா ஹசன் ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.



அவர்களை சந்திக்க ஷகிப் அல்-ஹசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் கொரோனா நோயின் தாக்கம் வேகமாக பரவி வருவதால் அங்கு சென்றும் தனது குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாமல் இக்கட்டான நிலைக்கு ஷகிப் அல்-ஹசன் தள்ளப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்காவை சென்றடைந்தேன்.

கொரோனா அச்சுறுத்தலால் பயணத்தின் போது சற்று பயமாகத்தான் இருந்தது.



முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நல்ல சத்தான உணவும் எடுத்துக்கொண்டேன்.

அமெரிக்கா சென்றடைந்ததும் நான் நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன்.

அங்கு 14 நாட்கள் தனிமையில் தங்கி இருக்க போவதாக எனது மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்து விட்டேன்.

நான் வங்காளதேசத்தில் இருந்து விமானத்தில் கிளம்பியதும் என்னால் யாருக்கும் வைரஸ் தொற்றி விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் தனிமைப்படுத்தலுக்காக நேராக ஓட்டலுக்கு சென்று விட்டேன். நான் இங்கு வந்த பிறகும் இன்னும் எனது மகளை பார்க்கவில்லை.

அது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்த தருணத்தில் இந்த தியாகம் மிகவும் முக்கியமானதாகும் என்று நினைக்கிறேன்.

வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது முக்கியமானதாகும்.

உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.



அடுத்த 14 நாட்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 43 வயது இயான் ஓ பிரையன் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க செல்வதற்கு விமானம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

மனநல சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள அவர் இங்கிலாந்து திரும்ப முடியாமல் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘வெலிங்டனில் இருந்து இங்கிலாந்து திரும்புவதற்காக 3 முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன்.

ஆனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து செல்லும் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை.



நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தாங்கி கொள்ளக்கூடிய நிலையில் எனது மனைவியின் உடல்நிலை இல்லை. எனவே அவரை நினைத்து கவலைப்படுகிறேன்.

நாடு திரும்பி 2 வாரம் தனிமையில் இருந்த பிறகு எனது குடும்பத்தினருக்கு உதவுவேன். வீடு திரும்பி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கிறேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker