TAMIL
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நேபாள வீராங்கனை 6 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் போக்ஹராவில் நேற்று நடந்த பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாலத்தீவு-நேபாளம் அணிகள் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த மாலத்தீவு அணியின் கேப்டன் சூனா மரியம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மாலத்தீவு அணி, நேபாள வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 10.1 ஓவர்களில் 16 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஹம்சா நியாஸ் 9 ரன்னும், ஹப்சா அப்துல்லா 4 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அய்மா அய்ஷாத் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
சர்வதேச போட்டியில் அறிமுக வீராங்கனையாக களம் கண்ட 24 வயதான நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 2.1 ஓவர்கள் பந்து வீசி ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி புதிய உலக சாதனை படைத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் நடந்த சீனாவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாலத்தீவு சுழற்பந்து வீராங்கனை மாஸ் எலிசா 4 ஓவர்கள் பந்து வீசி 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஆண்கள் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்ததே சாதனையாக உள்ளது.
பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய நேபாள அணி 0.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 6 விக்கெட் வீழ்த்திய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ஆட்டநாயகி விருது பெற்றார்.