TAMIL
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருகிறது – இலங்கையை தோற்கடித்தது
10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் மெல்போர்னில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்களும், கவிஷா தில்ஹாரி 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது அவரது சிறப்பான பந்து வீச்சாகும்.
ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்மிர்தி மந்தனா 17 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்னிலும், ஷபாலி வர்மா 47 ரன்னிலும் (34 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா தலா 15 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் ஆட்டநாயகி விருது பெற்றார்.
ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்து தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது.
அதே சமயம் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த இலங்கை அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில் ‘வெற்றி பெறும் போது கிடைக்கும் உத்வேகத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியது முக்கியமானதாகும்.
தொடர்ந்து கடினமாக உழைக்கும் பட்சத்தில் உத்வேகத்தை இழக்க மாட்டோம்.
பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி பந்து வீசினார்கள். நான் இந்த ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடினேன்.
அதனால் எனது ஆட்டத்தில் சில பவுண்டரிகளும் வந்தன.
வரும் போட்டிகளில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஷபாலி வர்மா பெரிய ஷாட்கள் அடித்து விளையாட விரும்பும் வீராங்கனைகளில் ஒருவர்.
அவரது அந்த இயல்பான ஆட்டத்தை தடுக்க நாங்கள் விரும்பவில்லை.
அவர் தொடர்ந்து இதேபோல் ஆட்டத்தை அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டும்’ என்றார்.
முன்னதாக இதே மைதானத்தில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் சந்தித்தன.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18.2 ஓவர்களில் 91 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 74 ரன்னில் சுருண்டது.
இதனால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹெய்லி ஜென்சென் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (காலை 9.30 மணி), இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.