TAMIL
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது
பெண்களுக் கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
‘ஏ’ பிரிவில் நேற்று மெல்போர்னில் அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.
தோள்பட்டை காயத்தால் முந்தைய ஆட்டத்தில் ஆடாத இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா அணிக்கு திரும்பினார்.
‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் சோபி டேவின் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார்.
இதன்படி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
மந்தனா 11 ரன்னில், ஆப்-ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.
அடுத்து விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா இறங்கினார்.
அதிரடி காட்டிய ஷபாலி, சுழற்பந்து வீச்சாளர் அன்னா பீட்டர்சனின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார்.
‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.
இந்த கூட்டணி உடைந்ததும் ஸ்கோர் மந்தமானது.
பாட்டியா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஷபாலி வர்மா 46 ரன்களில் (34 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.
பின்வரிசையில் இந்தியாவின் பேட்டிங் சொதப்பியது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் மோசமான பார்ம் தொடருகிறது. அவர் ஒரு ரன்னில் வீழ்ந்தார்.
20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. கடைசி 7 ஓவர்களில் இந்திய வீராங்கனைகள் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
விக்கெட் கீப்பர் ரேச்சல் பிரீஸ்ட் (12 ரன்), கேப்டன் சோபி டேவின் (14 ரன்), சுசி பேட்ஸ் (6 ரன்) சீக்கிரம் வெளியேற்றப்பட்டனர்.
மிடில் வரிசையில் மேட்டி கிரீன் (24 ரன்), கேட்டி மார்ட்டின் (25 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர்.
இருப்பினும் 18-வது ஓவர் வரை ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
19-வது ஓவரை வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவின் ஒரே ஓவரில் அமெலியா கெர் 4 பவுண்டரி உள்பட 18 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.
அமெலியா கெர்ரும், ஹைய்லெ ஜென்சனும் களத்தில் இருந்தனர்.
20-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே வீசினார்.
இதில் முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 11 ரன்கள் அவர்கள் சேகரித்தனர்.
இதனால் கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது.
இறுதிபந்தை ஷிகா பாண்டே ரொம்ப சாதுர்யமாக வீசினார்.
அதாவது ‘ஸ்கூப் ஷாட்’ அடிக்கும் திட்டத்துடன் அமெலியா கெர் ஆப் ஸ்டம்பு பக்கம் விலகிச் சென்றார்.
ஷிகா பாண்டேவும் பந்தை ஸ்டம்புக்குள் வீசாமல் அவர் விலகிய பகுதிக்கே போட்டார்.
இதனால் அவர் ஏமாந்து போனார். பந்து நேராக அவரது காலில் பட்டது.
இதில் 2-வது ரன்னுக்கு முயற்சித்த போது ஜென்சன் (11 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.
அமெலியா கெர் 34 ரன்களுடன் (19 பந்து, 6 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார்.
20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 6 விக்கெட்டுக்கு 130 ரன்களே எடுக்க முடிந்தது.
இதனால் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
இந்திய தரப்பில் பவுலிங் செய்த தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் என்று அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
16 வயதான ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை புரட்டியெடுத்த இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும்.
இதன் மூலம் முதல்அணியாக இந்தியா அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இது 4-வது முறையாகும். இந்திய அணி தனது கடைசி லீக்கில் இலங்கையை நாளை சந்திக்கிறது.
‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது.
விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி (83 ரன், 10 பவுண்டரி, 3 சிக்சர்), பெத் மூனி (81 ரன், 9 பவுண்டரி) அரைசதம் விளாசினர்.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்களுக்குள் அடங்கியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
இன்றைய லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-தாய்லாந்து (காலை 9.30 மணி), இங்கிலாந்து-பாகிஸ்தான் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.
‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் அணி சிறப்பாக செயல்படும் போது மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.
ஆனாலும் நாங்கள் ஒரே மாதிரியான தவறுகளை செய்கிறோம்.
முதல் 10 ஓவர்களில் நல்ல தொடக்கம் காண்கிறோம். அந்த உத்வேகத்தை தொடர்ந்து கொண்டு செல்ல தவறி விடுகிறோம்.
பந்துவீச்சு அவ்வப்போது நன்றாக இருக்கிறது.
சில நேரங்களில் திறமைக்கு ஏற்ப இருப்பதில்லை. இந்த பகுதியில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
ஷபாலி வர்மா எங்களுக்கு அருமையான தொடக்கம் தந்தார்.
அவர் தொடர்ந்து இதே போன்று வேகமாக ரன்கள் எடுப்பார் என்று நம்புகிறேன்.
அவரது பங்களிப்பு அணிக்கு முக்கியமானது’ என்றார்.