TAMIL
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்து அணியை பந்தாடியது இங்கிலாந்து
பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் கான்பெர்ராவில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, அறிமுக அணியான தாய்லாந்தை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீராங்கனைகள் அமி ஜோன்ஸ், டானி வியாத் இருவரும் ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கேப்டன் ஹீதர் நைட், நாதலி சிவெருடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை கடைசி வரை நிலைத்து நின்று ஆடி அணி வலுவான ஸ்கோரை எட்ட வழிவகுத்தது.
அதிரடியாக ஆடிய ஹீதர் நைட் 63 பந்துகளில் சதத்தை எட்டினார்.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் அடித்த முதம் சதம் இதுவாகும். அத்துடன் ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டியில் அடிக்கப்பட்ட 4-வது சதமாகவும், இந்த உலக கோப்பை போட்டியின் முதல் சதமாகவும் இது பதிவானது.
இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
நாதலி சிவெர் 52 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 59 ரன்னும், ஹீதர் நைட் 66 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இந்த இணை 169 ரன்கள் சேகரித்தது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு திரட்டப்பட்ட அதிகபட்ச ரன்இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற பெரிய வெற்றி இதுவாகும்.
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகி விருது பெற்றார்.
2-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
அந்த அணி முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து இருந்தது.
தாய்லாந்து அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் அந்த அணி தோற்று இருந்தது.
மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர், ஷிமைன் கேம்ப்பெல் தலா 43 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது.
கேப்டன் பிஸ்மா மரூப் 38 ரன்னுடனும், நிதா தர் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
2-வது லீக்கில் ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு இது முதலாவது தோல்வியாகும்.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 2-வது ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது.
இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
கான்பெர்ராவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.