TAMIL
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5-வது முறையாக ‘சாம்பியன்’
10 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் கடந்த 3 வாரங்களாக நடந்து வந்தது.
இதில் மெல்போர்னில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
தாங்களும் பேட்டிங்கையே விரும்பியதாக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார்.
இதன்படி விக்கெட் கீப்பர் அலிசா ஹீலியும், பெத் மூனியும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.
சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா மூலம் இந்தியா தாக்குதலை தொடுத்தது.
புல்டாசாக வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கிய அலிசா ஹீலி அந்த ஓவரில் மேலும் 2 பவுண்டரி ஓடவிட்டார்.
இதற்கு மத்தியில் 5-வது பந்தில் அவர் வெளியேறி இருக்க வேண்டியது.
கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘கவர்’ திசையில் நின்ற ஷபாலி வர்மா நழுவ விட்டார். அது தான் வினையாக மாறியது. இதே போல் பெத் மூனி 8 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை பவுலிங் செய்த கெய்க்வாட் வீணடித்தார்.
பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இருவரும் இந்திய பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினர். குறிப்பாக அலிசா ஹீலி, விசுவரூபம் எடுத்தார்.
கெய்க்வாட்டின் சுழலில் 2 சிக்சர் விரட்டிய அவர், வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டேவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் தெறிக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. இவர்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விழிபிதுங்கிப் போனார்.
அணியின் ஸ்கோர் 115 ரன்களாக (11.4 ஓவர்) உயர்ந்த போது அலிசா ஹீலி 75 ரன்களில் (39 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) ராதா யாதவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
200 ரன்களை தாண்டுவது போல் நகர்ந்த ரன்வேகம், அலிசா ஹீலி வெளியேறியதும் கொஞ்சம் தணிந்தது.
ஆனாலும் சவால்மிக்க மலைப்பான ஸ்கோரை எட்டிவிட்டனர். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி 150 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும். பெத் மூனி 78 ரன்களுடன் (54 பந்து, 10 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார்.
அடுத்து ‘மெகா’ இலக்கை நோக்கி கடும் நெருக்கடிக்கு இடையே இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் களம் இறங்கினர்.
முந்தைய ஆட்டங்களில் அதிரடியில் மிரள வைத்த 16 வயதான ஷபாலி இந்த ஆட்டத்தில் 3-வது பந்திலேயே 2 ரன்னுடன் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலியிடம் பிடிபட்டார்.
மந்தனா 11 ரன்னில் நடையை கட்டினார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4 ரன்) வழக்கம் போல் சொதப்பினார். விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (2 ரன்) முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்த போது, பந்து ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
இதனால் பாதியில் வெளியேறிய அவருக்கு பதிலாக, தலையில் பந்து தாக்கினால் மாற்று வீராங்கனையை சேர்க்கும் விதிமுறைப்படி 16 வயதான ரிச்சா கோஷ் வந்தார். அவர் தனது பங்குக்கு 18 ரன் எடுத்தார்.
நெருக்கடியை திறம்பட கையாளத் தெரியாமல் முக்கியமான ஆட்டங்களில் கோட்டை விடும் இந்திய வீராங்கனைகளின் பரிதாபம் இந்த ஆட்டத்திலும் நீடித்தது.
அதுவும் மகளிர் தினத்தன்று ராக்கெட் போல் சீறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், புஷ்வாணமாகிப்போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இந்திய அணி 19.1 ஓவர்களில் வெறும் 99 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.
அத்துடன் லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.
வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷூட் 4 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சென் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அலிசா ஹீலி ஆட்டநாயகியாகவும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பெத் மூனி (3 அரைசதம் உள்பட 259 ரன்) தொடர்நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷூட் (13 விக்கெட்) முதலிடத்தையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் (10 விக்கெட்) 2-வது இடத்தையும் பிடித்தனர்.
கோப்பையை உச்சிமுகர்ந்த ஆஸ்திரேலியாவுக்கு ரூ.7 கோடியே 40 லட்சமும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.3 கோடியே 70 லட்சமும் பரிசத்தொகையாக வழங்கப்பட்டது.
அடுத்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும்.
2018-ம் ஆண்டு உலக கோப்பை போல்…
இந்த உலக கோப்பையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே பிரிவில் (ஏ பிரிவு) இடம் பெற்றிருந்தன.
தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆஸ்திரேலியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ பிரிவில் 2-வது இடத்தை பெற்றது.
அதன் பிறகு அரைஇறுதியில் இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பு மழையால் ரத்தானால் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்திற்கு வந்து படுதோல்வி அடைந்திருக்கிறது.
2018-ம் ஆண்டு உலக கோப்பையிலும் கிட்டத்தட்ட இதே போல் தான் நிகழ்ந்தது.
அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக்கில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா அரைஇறுதியில் இங்கிலாந்துடன் பணிந்தது.
மறுபக்கம் எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியா மகுடம் சூடியது.
86 ஆயிரம் ரசிகர்கள் வருகை
இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய இறுதி ஆட்டத்தை பார்க்க மொத்தம் 86 ஆயிரத்து 174 ரசிகர்கள் குவித்து இருந்தனர்.
பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கை இது தான் என்று ஐ.சி.சி. பெருமிதத்தோடு கூறியுள்ளது.
வாணவேடிக்கை காட்டி நிலைகுலைய வைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதல் ஓவரிலேயே அதாவது 9 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய இளம் புயல் ஷபாலி வர்மா நழுவ விட்டார்.
அதை கேட்ச் செய்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.
போட்டி முடிந்ததும் கேட்ச் விட்டதை நினைத்து கண்ணீர் விட்டார். சக வீராங்கனைகள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 4 ஓவர்களில் 52 ரன்களை வாரி வழங்கி வள்ளலாக மாறினார்.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற அவச்சாதனைக்கு ஆளானார்.
* ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி 30 பந்துகளில் அரைசதம் நொறுக்கினார்.
ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இது பதிவானது.
* ஆஸ்திரேலியா திரட்டிய 184 ரன்களே, 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
* இந்திய பெண்கள் அணி இதுவரை எந்த உலக கோப்பையும் வென்றதில்லை. ஏற்கனவே 50 ஓவர் உலக கோப்பையில் 2005 மற்றும் 2017 ஆண்டுகளில் இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்தது.
பெண்கள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிருபர்களிடம் கூறியதாவது:-
லீக் சுற்றில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. எனது அணி வீராங்கனைகள் மீது நான் இன்னும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜம்.
தோல்விகளில் இருந்து தொடர்ந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஆட்டத்தில் எங்களது பீல்டிங் சரியில்லை.
துரதிர்ஷ்டவசமாக சில கேட்ச்களை நழுவ விட்டோம்.
ஷபாலி வர்மா, அலிசா ஹீலிக்கு தவற விட்ட கேட்ச் குறித்து கேட்கிறீர்கள். அவருக்கு வெறும் 16 வயது தான் ஆகிறது. இது தான் அவரது முதலாவது உலக கோப்பை போட்டி.
இந்த தொடரில் மிக மிக நன்றாக பேட்டிங் செய்தார். கேட்ச் நழுவிப்போவது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.
தோல்விக்கு அவரை காரணமாக சொல்ல முடியாது. மற்றவர்களும் கேட்ச்களை விட்டுள்ளனர். இத்தகைய சூழலில் 16 வயது வீராங்கனை ஒருவரை, தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க வைப்பது கடினம்.
பீல்டிங் செய்யும் போதும் 100 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டியது கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்று என்பது இந்த ஆட்டம் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம்.
கடந்த உலக கோப்பையில் அரைஇறுதியில் தோற்றோம். இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளோம்.
தொடர்ந்து கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் கோப்பையை வெல்லலாம் என்று ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.