TAMIL
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல். 7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
பதிவு: ஜனவரி 31, 2020 04:30 AM
கான்பெர்ரா,
7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்கு முன்பாக அங்கு நடக்கும் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த முத்தரப்பு தொடர் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இதில் கலந்து கொள்ளும் மற்ற இரு அணிகள் ஆகும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
கான்பெர்ராவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும். அதனால் இந்திய வீராங்கனைகள் இந்த போட்டியை நன்கு பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
இந்திய நேரப்படி காலை 8.40 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.