TAMIL
புஜாராவுக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் – கம்மின்ஸ் கருத்து
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விளங்குகிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கேள்வி-பதில் பகுதியில் பங்கேற்ற கம்மின்சிடம், உங்களது அனுபவத்தில் பந்து வீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு கம்மின்ஸ் கூறியதாவது:-
‘எங்களுக்கு கடும் போராட்டம் அளித்த நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் வித்தியாசமான வீரரை தேர்வு செய்கிறேன்.
இந்தியாவின் புஜாரா கடினமானவர் என்று கருதுகிறேன். கடந்த டெஸ்ட் தொடரில் அவர் எங்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய வலியாக இருந்தார்.
அந்த தொடரில் பாறை போன்று நிலைத்து நின்று விளையாடி குடைச்சல் கொடுத்தார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சவாலாக அமைந்தது.
அவரது மனஉறுதியும், கவனமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருந்தது.
இதுவரையிலான எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பந்து வீசுவதற்கு கடினமான ஒரு பேட்ஸ்மேன் அவர் தான் என்று கம்மின்ஸ் கூறினார்.
இந்திய அணி கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
அந்த தொடரில் புஜாரா 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.