TAMIL

பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளரா?

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.



இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக போட்டியின்றி தேர்வானார். புதிதாக தேர்ந்து எடுக்கபட்ட நிர்வாகிகள் அக்டோபர் 23 அன்று பதவியேற்கிறார்கள்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பிரபலமான ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியானது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகுதான் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வாக இருக்கும் தகவல் வெளியானது.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் தலையிட்டதால்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வானார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் கங்குலி விரைவில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து விடுவார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக தகவல் பரவியது.

இது குறித்து கங்குலி கூரும்போது, எந்த அரசியல்வாதியுடனும் எனக்கு தொடர்பு இல்லை என கூறினார்.

இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கூறும்போது,

கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிரிக்கெட் சங்க தலைவராக யார் வர வேண்டும் என்று நான் முடிவு செய்ய முடியாது. கிரிக்கெகட் சங்க தேர்தல் விதிகளின் அடிப்படையில் கங்குலி அந்த பதவிக்கு வந்துள்ளார்.

நான் கிரிக்கெட் விளையாட்டுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளேன். எனவே கங்குலி என்னை சந்தித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் அரசியல் பேசவில்லை.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக தகவலை பரப்புகிறார்கள். நான் அத்தகைய பேரம் எதையும் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது.

மேற்கு வங்க தேர்தலுக்காகவே கங்குலியை நாங்கள் தேடுவதாக சொல்வது தவறு. எந்த பிரபலமும் இல்லாமலேயே அங்கு 18 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் அமோக வெற்ற பெறுவோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker