CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்டும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.
ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 70 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
5 ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா 3 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்துவந்த கேப்டன் ரஹானே , ஷுக்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 15.5 ஓவரில் 70 ரன்களை எட்டிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
சிறப்பாக ஆடிய ஷுக்மன் கில் 35 ரன்களையும், கேப்டன் 27 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சம்மன் செய்துள்ளது. இரு அணிகளும் சமனிலையில் உள்ளதால் இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இரு அணிகளும் மோதும் 3-வது போட்டி ஜனவரி 7-ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.