TAMIL
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 151 ரன்னுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டேவிட் வார்னர் 154 ரன்னில், புதுமுக பவுலர் நசீம் ஷாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் பிடிபட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 4 ரன்னில் யாசிர் ஷாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அவரது பந்து வீச்சில் ஸ்டீவன் சுமித் ஆட்டம் இழப்பது இது 7-வது முறையாகும்.
இதையடுத்து மேத்யூ வேட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய லபுஸ்சேன் சதம் அடித்தார். 10-வது டெஸ்டில் ஆடும் லபுஸ்சேனுக்கு இது முதலாவது சதமாகும். அணியின் ஸ்கோருக்கு வலுவூட்டிய மேத்யூ வேட் தனது பங்குக்கு 60 ரன்கள் திரட்டினார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 24 ரன்னிலும், கேப்டன் டிம் பெய்ன் 13 ரன்னிலும் வீழ்ந்தனர். நிலைத்து நின்று மிரட்டிய லபுஸ்சேன் 185 ரன்களில் (279 பந்து, 20 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 157.4 ஓவர்களில் 580 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டும், ஹாரிஸ் சோகைல், ஷகீன் ஷா அப்ரிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதில் யாசிர் ஷா 48.4 ஓவர்கள் பந்து வீசி 205 ரன்களை வாரி வழங்கினார். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் அவர் விட்டுக்கொடுப்பது இது 3-வது நிகழ்வாகும. வேறு எந்த பவுலரும் இதுபோல் மோசமாக பந்து வீசியதில்லை.
பின்னர் 340 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் அசார் அலி 5 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 8 ரன்னிலும், ஆசாத் ஷபிக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்னுடன் பரிதவிக்கிறது. ஷான் மசூத் 27 ரன்னுடனும், பாபர் அசாம் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி இன்னும் 276 ரன்கள் பின்தங்கி இருப்பதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.