TAMIL
பவுலர்களை கலங்கடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் கெய்லா? வார்னரா? – ருசிகர மோதல்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ டி.வி. ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான போட்டி ஒன்றை வைத்துள்ளது.
அதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், ஐதராபாத் சன்ரைசர்ஸ் வீரர் டேவிட் வார்னர் இவர்களில் பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைக்கும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி கேட்டுள்ளது.
இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களில் ஒருவர்.
ஐ.பி.எல். வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் (175 ரன்) கொண்டவர். ஸ்டிரைக் ரேட் 150 ரன்களுக்கு மேல் வைத்திருப்பவர். ஐ.பி.எல்.-ல் அதிவேகமாக சதம் அடித்தவர்.
அதிக சிக்சர் நொறுக்கியவர்’ என்று கெய்லின் சாதனைகளை பட்டியலிட்டு, இப்போது நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.
வார்னரை விட்டுக்கொடுக்காத ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் பஞ்சாப்புக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தது.
‘அதிக ரன்கள் குவித்ததற்காக 3 முறை ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கியவர்.
அணிக்காக ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ள ஐதராபாத் அணி, எல்லாவற்றையும் விட கோப்பையை கையில் ஏந்த வேண்டியது முக்கியம், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பால் முடியுமா? என்றும் சுட்டிகாட்டியுள்ளது.
ஐ.பி.எல்.-ல் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கிறிஸ் கெய்ல் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் ஆடியிருக்கிறார்.
ஆனால் அவர் ஒரு போதும் ஐ.பி.எல். கோப்பையை ருசித்ததில்லை.